நவதாராளவாதப் பொருளாதார க் கொள்கைகளினால் அதிகரித்துச் செல்லும் சுமைகள்

23 Jun 2013 - Editorial

மின் கட்டண உயர்வுக்கு எதிராகக் கிளர்ந்துள்ள பரவலான அதிருப்தியும், போராட்டங்களும், அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் போக்குகளின் மீதான மக்களின் எதிர்ப்பின் சமீபத்தைய வடிவமே ஆகும். தாம் எதிர்கொண்ட அநீதிகளை பொதுமக்கள் நியாயமான முறையில் எதிர்த்துள்ளனர். இவ்வாறான பல போராட்டங்கள் கடந்த இரு வருடங்களாக நாட்டில் இடம்பெற்றுள்ளன. தனியார் ஓய்வுதிய மசூதாவுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களின் போது ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டார். ஜனவரி 2012 இல் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான போராட்டங்களின் காரணமாக தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பது தொடர்பான மசூதா தள்ளிவைக்கப்பட்டது. பெப்ரவரி 2012 இல் பெற்றோல் விலையேற்றத்தினைக் கண்டித்து மீனவர்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் மேற்கொண்ட போராட்டங்களின் போது மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது, ஒரு மீனவர் உயிரிழந்தார். நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக நீண்ட வேலைப் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஒன்றான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாகக் கடந்த ஆண்டில் மூன்று மாதங்களாக நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அணமையில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண உயர்வு, பல்வேறு முக்கியமான தொழிற்சங்கப் போராட்ட முன்னெடுப்புகளுக்கு வழிகோலியது.

தனியார் மயமாக்கலில் அரசு காட்டும் முனைப்பு, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தில் அரசு பெருமளவு நாட்டம் காட்டுதல், சமூக நலன்புரிச் செலவின் மீதான வெட்டுக்கள், உலக நிதி மூலதனத்தினைப் பெற்றுக் கொள்வதில் அரசு காட்டும் தீவிர ஆர்வம் (குறிப்பாக சுற்றுலா மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி ஆகிய துறைகளில்) என்பன இலங்கையின் நவதாரளவாதக் கொள்கைகளின் முக்கியமான அம்சங்கள் ஆகும். அரசின் அடக்குமுறைக்கு மத்தியிலும், அரச வன்முறைக்கு மத்தியிலும் இவ்வாறான கொள்கைகள் மக்களின் எதிர்ப்பினை வெளிப்படையாகவே சம்பாதித்துக் கொண்டன என்பது இங்கு முக்கியமானது.

சனத்தொகையின் பெரும்பாலானோர் அனுபவிக்கும் இவ்வாறான துன்ப நிலை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செழிப்பான தேசியப் பொருளாதாரம் ஒன்று கட்டியெழுப்பப்படுகின்றது என்ற பிரசாரத்தினை மறுதலிக்கிறது. 2010இலிருந்து 2012 வரை, கைத்தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளினைச் சார்ந்த ஊழியர்களின் உண்மை ஊதிய வீதச் சுட்டெண் 73.1 இலிருந்து 69.7 ஆகக் வீழ்ச்சி அடைந்துள்ளது. சேவைகள் துறையில் இது 55.6 இலிருந்து 53.7 ஆகக் குறைந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் நாட்டின் 74% ஆன வேலை செய்வோரைக் கொண்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கான மெய் ஊதிய வீதச் சுட்டி ஒரே நிலையில் தேக்கம் அடைந்தோ அல்லது குறைவடந்து சென்றுள்ளது.

ஆனாலும் விலைகள் இக்காலப்பகுதியில் உறுதியாக அதிகரித்துச் சென்றுள்ளன. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் 2013 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டி 151.5 இலிருந்து 173.9 இற்கு அதிகரித்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் நாளாந்த ஊதியம் பெறுவோரும் உள்ளடங்கலான தொழிலாளர் வகுப்புக்கள், மற்றும் வறிய மக்கள் அதிலும் குறிப்பாக வெளிநாட்டிலிருந்து பண உதவிகளைப் பெறாத குடும்பங்கள் இவ்வதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழமைவில் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதாரத்தினை மாற்றியமைக்கும் முயற்சிகளினை நாம் விமர்சன ரீதியாக கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும், பின் தங்கிச் செல்லும் ஊதியமும், சமூக நலன்புரி தொடர்பான செலவுகளின் மீதான வெட்டுக்களும் பல்வேறு தீவிரமான சமூகப் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் காலங் காலமாக ஊதியம் குறைவாக இருந்த போதிலும், நாட்டின் பிரசைகள் கல்வியினையும், சுகாதார மருத்துவ சேவைகளையும் இலவசமாகப் பெற்றமையால் ஓரளவு முன்னேற்றகரமான வாழ்க்கைத் தரத்தினைக் கொண்ட நாடாக இலங்கை இருந்து வந்துள்ளது. எனினும் இவ்வாறான சமூக நலன்புரி தொடர்பான விடயங்களின் மீதான செலவினைக் குறைப்பது நாட்டின் அரசிறைச் சுமையினைத் தளர்த்துவதில் தவிர்க்க முடியாத ஒன்று என வாதிடப்படுகிறது. எரிபொருட்கள், ஏனைய பொருட்களின் விலைகளினை மேலும் அதிகரித்தல் அல்லது சந்தை மூலமாகத் தீர்மானிக்கப்பட்ட விலைகளை நியாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளுதல் பொருளாதாரத்தினை மேலெழுப்புவதற்கான நடவடிக்கைகளாக அமையும் என அரசாங்கம் வாதிடுகிறது. எனினும், மக்களால் எதிர்கொள்ளப்படும் பொருளாதாரச் சுமைகளின் முன்பு இவ்வாதங்கள் செல்லுபடியற்றவையாக உள்ளன என்பதனை அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன. உதாரணமாக அரசினால் கல்வியும் சுகாதார சேவைகளும் வழங்கப்படுவதனைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் நலனுக்கு வெளிப்படையாகவே எதிராக உள்ளன. இச் செயற்பாடுகள் வீட்டுத்துறையினரை மேலும் கடன்பெறவே நிர்ப்பந்திக்கின்றன.

2006/7 காலப் பகுதிக்கான வீட்டுத்துறையினரின் வருமானம் மற்றும் செலவு தொடர்பான கணிப்பீட்டின்படி இலங்கையில் 61% இற்கும் அதிகமான வீட்டுத்துறையினர் கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளனர். இறுதியாக வெளிவந்த 2009/10 காலப் பகுதிக்கான வீட்டுத்துறையினரின் வருமானம் மற்றும் செலவு தொடர்பான கணிப்பீட்டின் படி வீட்டுத்துறையினரின் சராசரி மாதாந்த செலவுகளில் 5.1% கடன் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. விலைகளிலும், வாழ்க்கைச் செலவிலும் ஏற்பட்டுவரும் திடமான அதிகரிப்பு, மக்களின் நாளாந்த பொருளாதார வாழ்க்கை தொடர்பான அனுபவப் பகிர்வுகள், வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் விரிவடைந்து வரும் அடகுச் சேவை வசதிகள் என்பன வீட்டுத்துறையினரின் கடன் சுமை ஏறுமுகமாக உள்ளமையினைக் காட்டுகின்றன. தேக்கமடைந்து காணப்படும் அல்லது அழுத்தப்பட்ட மெய் ஊதியத்துடன் இணைந்த அதிகரிக்கும் கடன் பொருளாதார நெருக்கடி நிலையினைத் தோற்றுவிக்கக் கூடியது.

1977இல் ஜெயவர்தனா அரசினால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் தற்போதைய அரசாங்கத்தினால் முழுமூச்சாக முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு தீய விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நவ தாராளவாதம் நாட்டிற் காணப்படும் வருமான அசமத்துவத்தினை மேலும் அகலச் செய்துள்ளது. வீட்டுத்துறையினரின் மத்தியிற் காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வுகளை அளவிடும் கினிக் குணகம் 1980/81 காலப் பகுதிகளில் 43 ஆக இருந்து 2009/10 காலப் பகுதிகளில் 49 ஆக அதிகரித்துள்ளது (வீட்டுத்துறையினரின் வருமானம் மற்றும் செலவு தொடர்பான கணிப்பீடு 2009-10). இந்த அதிகரிப்பின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஆசியாவில் உள்ள இரு உயர்ந்த வருமான அசமத்துவம் அவதானிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கையினைக் குறிப்பிட்டுள்ளது. நவதாரளவாதம் குத்தகை அடிப்படையிலான கொள்வனவுகள் உள்ளடங்கலாக நுகர்வுவாதத்தினைத் தூண்டியுள்ளது. அதிகரிக்கும் செலவுகளுடன் இணைந்து இந்த நிலைமை நிதி மூலதனத்தின் கைகளைப் பலப்படுத்தியுள்ளதுடன் நுகர்வோரின் கடன் சுமையினையும் அதிகரிக்கச் செய்துள்ளது. மத்திய வங்கித் தரவுகளின்படி, 1978/79இற்கும் 2003/04 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சராசரி மாதாந்த செலவின் சதவீதமாக கடன் மீதான வட்டியின் அளவு ஏறக்குறைய நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

பலருக்கு நெருக்குதல்களினை உருவாக்குவதன் மூலமாகவே நவதாராளவாதம் சிலருக்கு பொருளாதாரச் செழிப்பினை ஏற்படுத்தியுள்ளது. நவதாராளவாதம் ஒரு கட்டத்தில் நெருக்கடியினைச் சந்திக்கும். ஆனாலும் அது பொருளாதார வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் மீதும் பொருளாதாரக் கொள்கை வகுப்புக்கள் மீதும் கருத்தியல் ரீதியாக ஆதிக்கஞ் செலுத்துகிறது. நவதாரளவாதத்தினை எதிர்கொள்வதற்கு நாம் அது எவ்வாறு எமது நாளாந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது என்பது தொடர்பாக விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். நாம் எதனை நுகர்கிறோம், எதனைக் கற்கிறோம் என்பன பற்றி கடைகளிலிருந்து வகுப்பறை வரை நாம் கொண்டுள்ள சமூக உறவுகளில் நவதாராளம் செலுத்தும் தாக்கங்கள் பற்றி நாம் விளங்கியிருத்தல் வேண்டும். எமது அன்றாட வாழ்விலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் நவதாராளவாதம் எவ்வாறு இயல்பாகப் பின்னிப்பிணைந்து உள்ளது என்பதனை ஆழமாகச் சிந்தித்து அதனது போலியான இயற்கைத் தன்மையினைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலமாகவே நாம் நவதாராளவாதத்தினை எதிர்க்கவும், கருத்தாழம் மிக்க மாற்றுக்களை முன்வைக்கவும் முடியும்.

இலங்கையினைத் தளமாகக் கொண்டு செயற்படும் பொருளாதாரத்தினை ஜனநாயகமயமாக்குவதற்கான ஒன்றியம் வரலாற்று நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட சமூகத்துடன் தொடர்புபட்ட அரசியற் பொருளாதார பகுப்பாய்வுகளை வழங்க முற்படுகிறது. முற்போக்கான போராட்டங்களுக்கு இவ்வொன்றியம் தனது ஒத்துழைப்பினை வழங்குகிறது. இந்த அமைப்பினால் வெளியிடப்படும் கட்டுரைகளையும் ஏனைய ஆவணங்களையும் www.economicdemocratisation.org என்ற இணையத்தள முகவரியிற் பார்க்க முடியும்.